டெல்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் 'நெய்பர்ஹூட் வூஃப்', இவர்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜூன் மூன்றாம் தேதி இரவு, தெரு நாய்களை மீட்டெக்கும் பணிக்காக என்ஜிஒவைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண் உட்பட சில ஊழியர்கள் டெல்லி, ராணிபாக் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தை முற்றி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை அப்பகுதி மக்கள் தாக்கத் தொடங்கி உள்ளனர். இதில், காயமடைந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக காரில் ஏறி அப்பகுதியிலிருந்து தப்ப முயன்றுள்ளனர். ஆனால் அப்போதும் விடாமல் கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தன்னார்வலர் ஆயிஷா அளித்த புகாரின் பேரில் ராணிபாக் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதல் குறித்து ரத்தம் வழிய ஆயிஷா பேசிய காணொலி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வலர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.