இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 'இந்தியா குளோபல் வீக் 2020' என்ற பெயரில், மூன்று நாள் மெய்நிகர் மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய சஞ்சீவ் சன்யால் பேசுகையில்,"இந்திய பணவீக்கம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பண வீக்கம் சுழியத்திற்கு அருகில் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு அரை டிரில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டில் நிலவிய இந்திய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்புமைப்படுத்தி பார்த்தால் கூட இது புலப்படும்.
சில துறைகளில் பொருளாதாரம் நிலையானதாக மாற்றம் பெற்றிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. தற்போதைய சீர்திருத்த பாதையில் பல்வேறு முன்னோக்குகளைக் கண்டது, இது கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் சிறு தொழில்களுக்கு அரசாங்கம் மூன்று டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள வளங்களை அளிப்பதாக 100 சதவீதம் உத்தரவாதம் அளித்துள்ளது" என்றார்.
"இந்தியா குளோபல் வீக் 2020" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் 75 அமர்வுகளில் 30 நாடுகளில் இருந்து உலகளாவிய பங்கேற்பாளர்கள் 5000 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இந்தக் கூடல் மூலமாக உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வழியே இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகான உலகளாவிய பொருளாதார மறுமலர்ச்சிக்குச் சாத்தியமானவற்றை குறித்து விவாதிப்பார்கள்.
இந்த மாநாட்டில் ஆத்ம நிர்பார் பாரத் பரப்புரையில் இதுவரை பார்த்திராத வெளிவராத பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.