மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்ட உள்ளன.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா," தோல்வி பயத்தில் எதிர்கட்சிகள் தேர்தல் நடைமுறை பற்றி கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்குகளை எண்ணும் முறையை மாற்றக் கோரிய எதிர்கட்சிகள் கோரிக்கை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. வாக்குகளை எண்ண உச்ச நீதிமன்றம் வழி வகுத்துள்ளது. இதில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன", என்று குறிப்பிட்டுள்ளார்.