மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த கூட்டணி 48 இடங்களில் 5 இடங்களை மட்டுமே கைபற்றியது. இந்த கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது பிரகாஷ் அம்பேத்கரின் வான்சித் பகுஜன் அகாடி கட்சி பெற்ற வாக்குகள்.
காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாக பெற்றுவரும் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை இந்த கட்சி பெருமளவு பிரித்தது. பல தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் மேல் இந்த கட்சி பெற்றது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலிலும் வான்சித் பகுஜன் அகாடி கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால், அக்கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், பாஜகவுக்கு கடும் போட்டிதர வான்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பிரகாஷ் அம்பேத்கர் மறுத்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையும் எதிர்க்கட்சிகளை இணைக்க காங்கிரஸ் தவறியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.