ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தல் மார்ச் 21, 23, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்ற களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த செல்வாக்கை ஓரளவேனும் மீட்டுக் கொண்டுவர எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சி சகாக்களுடன் மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரனை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முறையிட்டுள்ளார்.
குறிப்பாக, தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும், ஒரு சில இடங்களில் ஆளுங்கட்சியினரின் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவர்களின் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்துள்ளார் என்று அம்மாநில அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.