பாஜகவின் முந்தைய அரசால் செப்டம்பர் 2018, பிப்ரவரி 2019 என இருமுறை முத்தலாக் தடை மசோதா அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவைில் நிறைவேற்ற முடியாமல் போனது.
இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து முறையை ஒழிப்பதற்கான 'முத்தலாக் தடை மசோதா 2019' இன்று மக்களவையில் மீண்டும் புதிதாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த மசோதாவைத் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இஸ்லாமியப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இம்மசோதா அப்பெண்களின் வளர்ச்சிக்கு வித்திடும்.
மக்கள் நம்மை சரியான சட்டங்களை உருவாக்க தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மசோதா பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி வழங்குவதாக அமையும்" என்றார்.
இது குறித்து நடந்த விவாதத்தில் பேசிய ஹைதராபாத் எம்.பி.யும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, "இந்த மசோதா இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாக்காது; மாறாக அவர்கள் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும்" என்றார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் கூறுகையில், "இந்த மசோதாவிற்கும் இஸ்லாமியப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.