5ஜி சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஓப்போ - ஓப்போ நிறுவனம்
5ஜி சேவையில் இயங்கும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் சோதனையை ஓப்போ நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
உலகெங்கும் உள்ள டெலிகாம் நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் 5ஜி சேவை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பெரிய அளவில் முதலீடு செய்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் ரியல், ஐகூ (iQOO) போன்ற நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் முழுக்க முழுக்க 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் VoNR (Voice/Video on New Radio) எனப்படும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளதாக ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த VoNR சேவையின் மூலம் குறைவான ஒலி தாமதம், மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் படத் தரம் என ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.
இது குறித்த ஓப்போ நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆண்டி வு கூறுகையில், "5ஜி தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துவருவதில் ஓப்போ தீவிரமாகச் செயல்படுகிறது. இந்த VoNR சோதனையில் எரிக்சன் மற்றும் மீடியாடெக் ஆகிய நிறுவனங்கள் உதவின.
5ஜி சேவை வழங்குவதில் இந்த இரு நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதே நேரம் உலகிலுள்ள அனைத்துப் பயனாளர்களுக்கும் மிகச் சிறந்த 5ஜி அனுபவத்தைக் கொடுக்க தொடர்ந்து உழைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: சீனாவில் 2.47 லட்சம் நிறுவனங்கள் திவால்?