டெல்லி சவ்தர்ஜுங் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். அவர்களில் எவருக்கும் மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து தரவில்லை. படுக்கை வசதி இல்லாத காரணத்தால் அனைவரையும் ஒரே அறையில் தங்கவைத்துள்ளனர்.
குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் சுத்தமான அறையில், குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமலிருக்க பாதுகாப்பான அறையில் தங்கவைக்க வேண்டும். ஆனால் இந்த மருத்துவமனையில் தரையில் தூங்கும் அவலநிலை உள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் கூறியதாவது, "குழந்தை பிறந்ததும் தனி அறை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் படுக்கை வசதி, அறைகள் பற்றாக்குறையினால் அனைவரையும் ஒரே அறையில் தங்கவைத்துள்ளனர்.
இதனால் குழந்தைக்கு நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாது தரையில் உறங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. 'ஒரு நோயாளிக்கு ஒரு படுக்கை' என்ற திட்டத்தை கொண்டுவர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கூறும்போது, "அனைவரையும் ஒரே அறையில் தங்கவைப்பது மிகவும் சிரமமான ஒன்றாகவுள்ளது. அனைவரையும் கடந்து சென்று சிகிச்சை அளிப்பது கடினமாகவுள்ளது. படுக்கை வசதி, அறை பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடமும் தலைமை மருத்துவரிடமும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக படுக்கை வசதி, அறை வசதி நோயாளிகளுக்கு செய்து தர வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ஒரு நோயாளிக்கு ஒரு படுக்கை' என்ற திட்டத்தை கொண்டு வர நாங்களும் வலியுறுத்துகிறோம்" என்றார்.