கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இருப்பிடம், உணவு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு செய்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனித உரிமை செயல்பாட்டாளர் மேதா பட்கர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிக்கை சமர்பிக்க கோரியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று தொடங்கியது. வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா, "நாடு முழுவதும் ஒரு கோடி குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக ஏற்பாடு செய்துள்ளது. 41 லட்சம் சாலை போக்குவரத்து வழியாகவும், 57 லட்சம் ரயில் பாதை வழியாகவும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிப்பெயர்ந்த மக்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக தேவையான எண்ணிக்கையிலான ரயில்களை குறித்து தெரியப்படுத்த வேண்டுமென தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கையின் பேரில், மத்திய அரசு 24 மணி நேரத்திற்குள் ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குகிறது. " என தெரிவித்தார்.
அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், "மகாராஷ்டிராவில் இருந்து 11 லட்சம் குடிப்பெயர்ந்தோர் வெளியேறியுள்ளதாகவும் 38,000 பேர் மீதமுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 802 ரயில்களை அங்கு மத்திய அரசு இயக்கியுள்ளது.
குஜராத்தில் இருந்து 19 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளதாகவும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீதமுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தைப் பொருத்தவரை குடி பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது, அவர்களின் பூர்வீகக்குடி மக்களை திரும்ப அழைத்துகொள்வது என இரு கடமை அம்மாநில அரசிடம் உள்ளது.
இதுவரை அம்மாநிலத்திற்காக 1664 ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் 21 லட்சத்து 69 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவற்றில், 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் டெல்லி பகுதிகளிலிருந்து கொண்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பேருந்துகள் மூலமாக 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் உத்தரப்பிரதேசத்திற்குள் வந்தடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 3 லட்சம் குடி பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சில லட்சங்களில் வெளிமாநில் மக்கள் அங்கே இருக்க வாய்ப்பு உள்ளது.
பீகார் அரசு தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 10 லட்சம் பேரின் திறன் வரைபடத்தை அவர்கள் வரையறை செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பதிவுசெய்த குடி பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, மக்களின் எண்ணிக்கை குறித்து அம்மாநில அரசுக்கு இன்னும் உறுதியாக அறியவில்லை.
இருப்பினும், அங்கே 3 லட்சத்து 97 ஆயிரத்து 389 பேர் இன்னும் சிக்கித் தவித்து வருகின்றனர் என நம்பப்படுகிறது. அவர்களில் 1 லட்சம் பேருக்கு நிவாரண முகாம்களின் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
குடி பெயர்ந்தோரின் போக்குவரத்து விவரங்கள் குறித்து மதிப்பீடு அளிக்க தமிழ்நாடு அரசு கால அவகாசம் கோரியுள்ளது" என தெரிவித்துள்ளார்.