ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள எலுரு பகுதி மக்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வாந்தி, தலைவலி, மயக்கம், வலிப்பு, மறதி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிலர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பினும், தொடர்ந்து மக்கள் இந்தப் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.இதுவரை இந்த நோயால் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நோய் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் காரியம், நிக்கல் அதிகளவு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நச்சு காரணமாகவே அவர்களுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பழங்கள் மற்றும் காய்கறிகளில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் உள்ள ஆர்கானிக் குளோரைடு (organic chloride) காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
புற்றுநோய் மற்றும் பிற சுகாதார அபாயங்களுக்கு ஆர்கானிக் குளோரைடு வழிவகுப்பதால் அதனை பயன்படுத்த பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிந்து சமவெளி மூதாதையர்கள் உண்ட மாட்டுக்கறி: மண்பாண்ட பொருள்களில் காணப்பட்ட ஊண் கொழுப்பு!