மத்தியப் பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபக். இவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி தனது நீரிழிவு நோய்க்கு மருந்துகளைப் பெற அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்போது அவரை நிறுத்திய காவலர்கள், அவரை தேவையின்றி சரமாரியாகத் தாக்கினர்.
தான் ஒரு வழக்கறிஞர் என்று தீபக் கூறிய பிறகே அருகிலிருந்த மருத்துவமனைக்குக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்தத் தாக்குதல் குறித்து தீபக், காவல் துறையில் புகார் அளித்தார். புகாரளித்து இரண்டு மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இன்னும் தீபக் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், தீபக்கின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய உதவி ஆய்வாளர் பி.எஸ். படேல், மே 17 அன்று அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது பி.எஸ். படேல், "நீங்கள் வைத்துள்ள தாடி காரணமாக உங்களை இஸ்லாமியர் என்று தவறாகக் கருதியே காவலர்கள் தாக்கிவிட்டனர்" என்று கூறியுள்ளார்.
காவலரின் இந்தப் பேச்சை தீபக் ரெக்கார்ட் செய்திருந்தார். இந்த ஆடியோவை தீபக் ஊடகத்தினரிடம் வழங்கினார். காவலரின் இந்த பேச்சு இணையத்திலும் வைரலானது.
அதைத்தொடர்ந்து, விசாரணைக்குச் சென்ற இடத்தில் தேவையற்ற கருத்தைக் கூறிய பி.எஸ். படேலை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்ரத்தா ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உ.பி.யில் சாலை விபத்து; புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு