மனிதர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு கை, கால்களுடன் விரல்களுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு மனிதனுக்கு 10 விரல்களில் ஒரு விரல் இல்லையென்றாலும் சிரமம்தான். அதே நேரத்தில் 10இல் ஒரு விரல் அதிகமாக இருந்தாலும் சிரமம்தான்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள கடபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி நாயக். தற்போது 75 வயதாகும் இவருக்கு பிறவியிலேயே 12 கை விரல்கள், இரு கால்களிலும் தலா 10 என 20 விரல்கள் அமைந்துள்ளன. பிறவியிலேயெ இதனால் அவ்வூர் மக்கள் அவரை சூனியக்காரி என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் அவர் பிறந்தது முதல் பிறருடன் சகஜமாக பழக முடியாமல் வேதனை அடைந்துள்ளார்.
இது குறித்து குமாரி நாயக் வேதனையுடன் கூறுகையில், 'நான் பிறக்கும்போதே எனது கை, கால்களில் இப்படிதான் இருந்தது. இது பிறவிக் குறைபாடு. ஆனால் இதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. இதனை சரி செய்ய எனக்கு போதிய வசதி இல்லை. என்னுடைய உறவினர்கள் நான் ஒரு சூனியக்காரி என்று ஒதுக்கி வைக்கிறார்கள். என்னுடைய இந்த நிலை காரணமாக நானே சிலரிடம் என்னை விட்டு விலகி இருங்கள் என்று கூறியிருக்கிறேன்' என்றார்.
ஊர் மக்களே சூனியக்காரி என முத்திரை குத்திய அந்த பெண் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளார். இதற்கு முன் குஜராத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதர் என்பவர் 14 கால்விரல்கள் இருந்ததால் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹனுமன் சாலிசா பாடல் விவகாரம்: யோகிக்கு கெஜ்ரிவால் பதிலடி