ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதான இவர் தனது சிறுவயதில் இருந்தே ஆன்மிகம் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், மற்றவரிடத்தில் அதிக நேசம் கொள்பவராக காணப்பட்டார்.
தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றார். இலவசமாக பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுப்பது, எண்ணற்ற உதவிகளை அப்பகுதி மக்களுக்கு செய்துவந்துள்ளார். சொந்த செலவில் பள்ளிக் கூடம் ஒன்றை கட்டி முடித்துள்ளார்.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு பாஜக சார்பில் பாலசூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரதாப் சந்திர சாரங்கி தோல்வியுற்றார். அவரது விடா முயற்சியும், எளிமை குணமும்தான் 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளது.
தற்போது மக்களுக்கு பிடித்த தலைவனாக மாறியுள்ளார். இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது காசு பணத்திற்கு ஆசைப்படவில்லை. சைக்கிளில்தான் அவரது பயணங்கள் தொடர்கிறது. இன்றளவும் சைக்கிளில்தான் பயணிக்கிறார்.
இரவில் மாணவர்களுக்கு ஆசிரியர், பகலில் அரசியல்வாதி. இதுதான் அவரது உண்மை முகம். இப்படிப்பட்ட எளிமை குணம் கொண்டவரைத்தான் மக்கள் தங்களுக்கான மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர். மண் குடிசையில் வாழ்ந்துவரும் இவரை பாலசூர் தொகுதி மக்கள் டெல்லி வரை பயணிக்க வைத்து அழகு பார்த்துள்ளனர்.