பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு ஒடிசா அரசாங்கத்தின் சார்பில் இதுகுறித்த வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் விவசாய அமைச்சர் அருண் சாஹூ நேற்று ( மே 27) கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நமது மாநில எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்கும் சூழ்நிலை உள்ளதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்து ஒடிசா வேளாண்மை தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(OUAT), வேளாண்மைத் துறை ஆகியவை விவசாயிகளுக்கு ஆலோசனையை வெளியிட்டுள்ளன. இதனை நாம் பின்பற்ற வேண்டும்.
இதன் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கையாக வேப்பமர விதைகளை அரைத்து தண்ணீரில் கலந்து அதனை பயிர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்தாக தெளிக்க வேண்டும். மேலும் சந்தையில் கிடைக்கும் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
இந்த ஆபத்து குறித்து விவசாயிகள் பயம் கொள்ள எந்த காரணமும் இருக்காது. ஏனெனில் இதுபோன்ற பிரச்னைகளை இதுவரை ஒடிசா மாநிலம் சந்தித்தது இல்லை. ஆனால் வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்குதல் குறித்த இந்த வழிகாட்டுதல்களை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் வருமா ? - வேளாண் துறை விளக்கம்