கோவிட்-19 எனும் கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே, ஒடிஸா மாநிலத்தில் உள்ள கஞ்சம், குர்தா, ஜெய்பூர், கட்டாக், பாலாசோர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கடந்த சில தினங்களாக கரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழநாடு டிஜிபி ஏ.கே. திரிபாதி, "கஞ்சம், குர்தா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளை அனுமதிப்பதில் மருத்துவமனை நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றன. இது சட்டப்படி குற்றம், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், ஒடிஸா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தப்பட்ட முகாம் ஆகியவைற்றை மாநில நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரம் தொடர்பாக எந்த சமரசமும் செய்யாமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ஒடிஸா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சையளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்களுக்கு கரோனா தொடர்பான அறிகுறிகள் தோற்றினால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.