இஐஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
சுற்றுச்சூழலை நாசப்படுத்தி நாட்டைத் திருடி விற்பதே இந்த வரைவு அறிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ராகுலின் இந்த விமர்சனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார்.
அதில் அவர், ”இது வெறும் வரைவு அறிக்கைத் தானே தவிர, இறுதி முடிவு அல்ல. எனவே இதற்கு இத்தகைய எதிர்ப்பை தெரிவித்து சர்ச்சையைக் கிளப்புவது தேவையற்ற செயல். பொதுவாக வரைவு குறித்த மக்களின் கருத்துக்கு பொதுவாக 60 நாள்களே அவகாசம் வழங்கப்படும். ஆனால், கோவிட்-19 காலம் என்பதால் இஐஏ குறித்த பொதுக்கருத்துக்கு 150 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றை முழுமனதுடன் வரவேற்று, சட்டம் இறுதிவடிவம் பெறும்போது அனைத்து கருத்துகளும் ஆலோசிக்கப்படும்” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய முடிவுகளை எந்தவித ஆலோசனையும் இன்றி நிறைவேற்றினார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகச் சாடினார் பிரகாஷ் ஜவடேகர்.
இதையும் படிங்க: செப்டம்பர் இறுதிவரை பயணிகள் ரயில் சேவை ரத்து