இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் அகில இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இது குறித்த வழக்கில் அனைத்து தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக மனு தாக்கல் செய்தனர். இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய மூன்று மாத காலத்திற்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்நிலையில், நீட் தேர்வு இன்னும் நடைபெறாத நிலையில், 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்புள்ளதா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.