டெல்லி: தனக்கும், பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கும் இடையே எந்த சந்திப்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் வியாழக்கிழமை (டிச.24) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியதற்காக ரமணி மீது அவர் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு புகாரின் இறுதி விசாரணையின் போது அக்பர் இதனை தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் #MeToo இயக்கத்தின் மூலம் எம்ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை ரமணி முன்னெடுத்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்ஜே அக்பர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ளது. வழக்கு விசாரணையில், அக்பருக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கீதா லுத்ரா கூறுகையில், “குற்றச்சாட்டு எழுந்த தினத்தில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
இவர்களுக்கு இடையே எவ்வித உரையாடலும் நடைபெறவில்லை. அக்பர் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
மேலும் கார் நிறுத்தத்தில் நடந்த சந்திப்பு எந்தத் தேதி, அதுதொடர்பான ஹோட்டல் பதிவு, சிசிடிவி அல்லது நுழைவுச் சீட்டையும் ரமணி சமர்பிக்கவில்லை. இதுமட்டுமின்றி, அவர் எதையும் நிரூபிக்கவில்லை” எனக் கூறினார். கடந்த காலங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களை பெண்கள் வெளிவுலகுக்கு காட்டிடும் வகையில் #MeToo இயக்கம் அமைந்தது.
இந்த இயக்கத்தின் மூலம் பிரியா ரமணி, எம்ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது எம்ஜே அக்பர் மீது தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த எம்ஜே அக்பர், பிரியா ரமணி மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்வேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, ரமணி மீது கிரிமினல் அவதூறு புகாரை அக்டோபர் 15, 2018 அன்று தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து எம்ஜே அக்பர் அக்டோபர் 17, 2018 அன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு விசாரணையின் இறுதி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், “தனக்கும், பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கும் இடையே எந்தச் சந்திப்பும் இல்லை” என்று எம்ஜே அக்பர் தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஊடக நிறுவனத்தில் பணியாற்றிய போது அக்பர் எவ்வாறு நடந்துகொண்டார்? பிரியா ரமணி விளக்கம்