கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. வைரஸ் பிறப்பிடமான சீனாவில், அதன் தாக்கம் குறைந்த நிலையில், மற்ற நாடுகளில் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்துவருகின்றன. இதன் காரணமாக, கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
அதேபோல், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை, தற்போது கரோனாவின் தலைநகராக மாறியுள்ளது. மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில், கரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ளது.
இதுவரை அங்கு 85,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பால் 4,938 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றின் தாயகமான சீனாவிலேயே 83,565 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4,634 பேர் உயிரிழந்தனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசை வாழ் பகுதியான மும்பையின் தாராவியில், பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டபோதிலும் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் இன்று(ஜூலை 7) வரை சராசரியாக ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
துருக்கி, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா நாடுகளை விட, இந்தியாவின் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும். மகாராஷ்டிராவில் மட்டும் 2,11,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,026 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடமும், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?