பாட்னா: நாளை பிகார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், "லோக் ஜனசக்தியின் தலைவரான சிராக் பாஸ்வானையும், அவர்களது கட்சி வாக்குறுதிகளையும் பிகார் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
அவர்களுக்கும் பாஜக கூட்டணிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான். நாங்கள் அவர் தலைமையின்கீழ் முழு அதிகாரத்துடன் ஆட்சி அமைப்போம்.
கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் தன்னுடைய தந்தையின் புகைப்படத்தையே நிராகரிக்கும் தேஜஸ்வி யாதவ் மீது மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள். அவர், தன்னுடைய ஆதாரவாளர்கள் என்று சுற்றிவரும் சிறு கூட்டத்தை வைத்து கட்சியை வழிநடத்துகிறார்.
அதுமட்டுமின்றி, அவர் சாதி ரீதியாக பிகார் தேர்தலைத் திசைத் திருப்பிவருகிறார். பிகார் மக்கள் காட்டுத்தனமான அரசியலை மீண்டும் விரும்ப மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யா, பிகார் அரசியலில் களம் காணும் சிராக் பாஸ்வான் துடிப்பான தலைவர் மட்டுமின்றி, தனக்கும் மிக முக்கியமான நண்பர் என்றார்.
பிகார் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களுடனும் சிராக் பாஸ்வான் நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய தேஜஸ்வி சூர்யா, இவர் இளைஞர்களுக்கான நல்ல தலைவர் என்று புகழாரம் சூட்டினார். அவர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டார்.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனான சிராஜ் பாஸ்வான் குறித்து பாஜகவினர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்துவருவது பிகார் தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.