உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக்குக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வறுமையில் வாடியவர்களுக்கு உதவிய காரணத்தால் அரசு சாரா அமைப்பான உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சரவுக்குள்ளான பகுதிகளில் அமைதியை நிலை நாட்ட இந்த அமைப்பு பெரும் பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த அமைப்பு பல முயற்சிகளை செய்துள்ளது. உலக உணவு திட்ட அமைப்பு, 88 நாடுகளில் 10 கோடி பேருக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது.
ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெயின்ஹார்ட் கென்சல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கேஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசும் இமனுவேல் ஷார்பான்தியே (பிரான்ஸ்), ஜெனிபர் ஏ. டோட்னா (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.