காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ மாநில அரசு 'சோதனையும் இல்லை, கரோனாவும் இல்லை' கொள்கையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இது தொற்று குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து மெட்ரோ நகரங்களும் புதிய கரோனா வைரஸ் பாதிப்புகளால் நிரம்பியுள்ளன. நேற்று ஒருநாள் மட்டும் மாநிலத்தில் இரண்டாயிரத்து 500 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்கள் வரை கரோனா வைரஸ் பரவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காக்க இயலாதநிலை ஏற்பட்டுள்ளது. அரசும் தொடர்ந்து பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைத்துவருவதாக தகவல் வெளியாகிவருகிறது.
சோதனைகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் வரை, வைரஸுக்கு எதிரான போராட்டம் முழுமையடையாது. மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது.
மோசமான பராமரிப்புகள் காரணமாக மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இதனாலே மக்கள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள தயங்குகின்றனர். சரியான நேரத்தில் வைரஸைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், கரோனாவுக்கு எதிரான போர் ஒரு பேரழிவாக மாறும்.
வாரணாசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மோடி பிரதமாகியுள்ளார். ஆனால், அப்பகுதி மக்களுக்காக ஒரு தற்காலிக மருத்துவமனைகளைக் கூட அமைக்காதது ஏன்? மருத்துவ வசதி பெறுவது ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை. மாநிலத்தில் 1.5 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் 20 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
உத்தரப் பிரதேச மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதில் எங்களுக்கு மிகப்பெரிய உணர்வு இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறேன். தொற்றுநோய்க்கு எதிரான இந்த போரில், காங்கிரஸ் கட்சி மக்களுடன் நின்று அரசுக்கு முழு ஆதரவையும் கொடுக்க தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.