கரோனா வைரஸ் குறித்த எந்தவித தவறான கருத்துகளும் மக்கள் மத்தியில் நிலவாமல் கவனிக்குமாறும், கரோனா சிகிச்சை தவிர்த்து பிற அவசிய மருத்துவ சேவைகளையும் வழங்கும்படியும் பிரதமர் மோடி சுகாதாரத் துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் நிலவரங்களைக் கேட்டறிந்த அவர், சிகப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள மாவட்டங்களின் வைரஸ் பரவும் சங்கிலியை தகர்ப்பது குறித்தும் ஆலோசித்துள்ளார்.
சிகப்பு மண்டலங்களை ஆரஞ்சு நிறமாகவும், தொடர்ந்து பச்சை மண்டலங்களாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகள் தங்கள் பணியைத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேர் புதிதாய் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக கரோனா பரவிய 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் புதிதாக எவரும் பாதிக்கப்படாததும், கடந்த 14 நாட்களில் மொத்தம் 85 மாவட்டங்களில் புதிதாய் எவரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் பொருத்துக்கொள்ள முடியாது - தலைமை நீதிபதி பாப்டே