கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஏழு நாள்களில் குணப்படுத்தலாம் என்று கூறி பதஞ்சலி நிறுவனம் கரோனில் என்ற மருந்தை கடந்த வாரம் வெளியிட்டது.
இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் மருத்துவ பரிசோதனைகளை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், கரோனில் விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலிக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், யோகா குரு ராம்தேவ் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த பொருத்தமான பணிகளை பதஞ்சலி செய்துள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், பதஞ்சலி சரியான திசையில் பயணிப்பதாகவும் அது கூறியது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த மருந்துகளுக்கான உரிமத்தை நாங்கள் பொற்றுள்ளோம்.
சிகிச்சை என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்த மருந்துகளில் எந்த உலோக பொருள்களும்(metallic items) இல்லை. ஆயுஷ் அமைச்சகத்துடன் எங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. இப்போது, கரோனில், ஸ்வாஷாரி, கிலாய், துளசி, அஸ்வகந்தா உள்ளிட்ட பொருள்களுக்கு எவ்வித தடையும் இல்லை.
எனவே, இன்று முதல், இந்த மருந்துகள் (பதஞ்சலியின் ஸ்வாசரி கரோனில் கிட்) எந்தவொரு சட்டரீதியான தடைகளுமின்றி நாடு முழுவதும் கிடைக்கும். அதற்கு எந்த தடையும் இல்லை. இதற்காக, ஆயுஷ் அமைச்சகத்திற்கும் நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.
மேலும், பதஞ்சலி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்துப் பேசிய அவர், "பதஞ்சலி இதற்காக உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தியது. எங்கள் சோதனைகளில் மூன்று நாள்களில், 69 விழுக்காடு நோயாளிகளும், ஏழு நாள்களில் 100 விழுக்காடு நோயாளிகளும் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர். இது குறித்த தரவுகளை நாங்கள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அளித்துள்ளோம்.
கரோனா தவிர உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, கீல்வாதம், டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மூன்று நிலை ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் ” என்றார்.
தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து பேசிய ராம்தேவ், "இந்தியாவில் யோகா செய்வதும் ஆயுர்வேதம் குறித்த பணிகளையும் மேற்கொள்வதே குற்றமாகிவிட்டது. பயங்கரவாதிகள் மீது பதிவு செய்யப்படுவதைப் போல 100க்கும் மேற்பட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
எங்களிடம் 500 ஆராய்சியாளர்களைக் கொண்ட குழு உள்ளது. அவர்கள் இரவும் பகலும் வேலை செய்கிறார்கள். அவர்களின் இந்த கண்டுபிடிப்பு மருந்து மாஃபியா, பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இந்திய நிறுவனங்களுக்கு எதிராக செயல்படுபவையாக மாற்றியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆடு மேய்ப்பவருக்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட ஆடுகள்