புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அரசின் நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து ஆளுநரும், மத்திய அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவிற்கு நேற்று தலைமை நீதிபதி அடங்கிய 2 நபர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
156 பக்கமுள்ள அந்தத் தீர்ப்பின் கடைசி பக்கத்தில், யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியை மாநிலமாக கருத முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில கருத்துக்களையும் நீதிபதிகள் சரியாக கூறியுள்ளனர். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்றுதான் செயல்பட வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களே நிர்வாகத்திற்கு முழு பொறுப்பு. ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையை மீறிய அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், அமைச்சர் அனுப்பும் கோப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால், ஆளுநர் செயலர் மூலம் அமைச்சரிடம் இருந்து கேட்டறியலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசு தலைவருக்கு அந்தக் கோப்புகளை அனுப்பலாம். அதேசமயம் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை நிராகரிக்கவோ, திருத்தம் செய்யவோ, வைத்திருக்கவோ துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தனிப்பட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு இல்லை.
சட்டப்பேரவையில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், அமைச்சரை அழைத்து விசாரிப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. அமைச்சர்கள் ஆளுநர் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை. தீர்ப்பை பின்பற்றி அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிப்பேன். அதன்படி நடைபெறாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகும். நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக மக்கள் ஆட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினி செய்தியாளர் சந்திப்பு குறித்து, ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என்று கூறினேன். இன்று முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இது அவருடைய கருத்து. நான் ஒரு இளைய அரசியல்வாதிதான் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.