டெல்லி: காங்கிரஸ் கட்சி, தலைவரின் வழிகாட்டுதல் இன்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தேர்தல்களில் தொடர் தோல்வியையும், எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சி தாவுதலில் ஈடுபட்டு வருகின்றனர். வலிமையான தலைமையை தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், கட்சி மிகுந்த பாதிப்பை சந்திக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களே விமர்சித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த உத்தரப் பிரதேச இடைத் தேர்தலிலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றியை எட்ட முடியவில்லை. இதன் காரணமாகவும் பலர் காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி பலரும் சோனியா காந்தியை குற்றஞ்சாட்டி, கடிதம் எழுதினர். இது கட்சிக்குள்ளே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கட்சித் தலைமை விவகாரம் தலை தூக்கியுள்ளது.
இது தொடர்பாக பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "பிகார் தேர்தலில் பெற்ற தோல்வியால் காங்கிரஸ் தலைமையை குறை சொல்வது ஏற்க முடியாத ஒன்று. காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கு பஞ்சம் என பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை. இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பவர்கள் குறுடர்களாக இருப்பதாகவே தெரிகிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை மறுக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் செயற்குழு ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இது குறித்து காங்கிரஸ் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சியில் தலைவர்கள் இல்லை. இடதுசாரிய கட்சிகளிலும் தலைவர்கள் இல்லை. அக்கட்சிகளில் பொதுச் செயலாளர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அமைப்பு முறையை பின்பற்றுகின்றன. இதில் தவறு என்ன உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியில் இடைக்காலத் தலைவராக சோனியா தொடர்வது அரசியலமைப்பிற்கு முரண் அல்ல.
கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது", என்றார்.
இதையும் படிங்க: தொடர் தோல்வியில் காங்கிரஸ்: தலைமைக்கு எதிராக பொங்கும் மூத்தத் தலைவர் யார்?