இருமொழி கொள்கை நடைமுறையிலிருந்து வரும் நிலையில், மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு மும்மொழி கொள்கையைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்திருந்தது.
அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை புதிய வரைவு கொண்டுவந்தது. 484 பக்கங்கள் கொண்ட வரைவில் இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, ஆங்கில மொழி ஆகியவையோடு இந்தி மொழியையும் கற்பிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணமில்லை. இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம். மும்மொழி கொள்கை தொடர்பான வரைவு, அதற்கான கமிட்டியால் தயார் செய்யப்பட்டது. இதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் கருத்துக் கேட்புக்குப் பின்பே முடிவ எடுக்கப்படும்" என்றார்.