நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் தற்போதைய கரோனா பாதிப்பு குறித்து விரிவான விளக்கமளித்தார். இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது எனவும், மூன்றாம் கட்டம் என்ற கம்யூனிட்டி பரவல் என்பதை இந்தியா அடையவில்லை எனவும் அவர் கூறினார்.
தற்போது வரை வெளிநாடுகளிலிருந்து வந்து நோய் பாதிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே பிறருக்குப் பரவிவருவதாகவும், சமூகத்தையே பாதிக்கும் நிலைமையை இந்தியா அடையவில்லை எனவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றிவரும் இந்திய சுகாதாரத் துறை, நோய் பரவலைத் தடுக்க உயர்தர ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பாதிப்பானது இயற்கையாக அரங்கேறியதா அல்லது சோதனையின்போது தவறுதலாக வெளியேறிவிட்டதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், தற்போதைக்கு நாட்டை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டியதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது எனவும், உலக சுகாதார மையத்திடமிருந்து முறையான தரவுகள் கிடைத்த பின் உண்மைத்தன்மை வெளியே வரலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீனாவின் பொறுப்பின்மைக்கு உலகம் விலை கொடுக்கிறது - ட்ரம்ப் தாக்கு