பிகாரில் நிலவும் மோசமான வெப்பநிலையால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், மூளைக்காய்ச்சால் நோயால் இதுவரை அங்கு 147 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காய்ச்சலால் பெரும்பாலும் குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெப்பநிலையால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை சமாளிப்பது குறித்து விரிவாக கலந்தாலோசிக்க ஔரங்காபாத், கயா, நவாடா மாவட்ட நிர்வாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிகார் மாநிலத்தில் நிலவும் வெப்பநிலையால் இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது ஔரங்காபாத், கயா, நவாடா ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கயாவில் 39 பேரும், நவாடாவில் 14 பேரும், அதிகபட்சமாக ஔரங்காபாத் மாவட்டத்தில் 58 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஏ.என்.எம். மருத்துமனையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தில் மூளைக்காய்ச்சல் நோய் குறித்தும், அதற்கான தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.