வாகன விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநில கட்சிகளின் கடும் எதிர்ப்புக் குரலையும் மீறி இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில் ஏற்கனவே இருந்த அபராதத்தை விட அதிகமாக கூட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, சீட்பெல்ட் அணியாமல் இருப்பதற்கான அபராதத் தொகை ரூ.100லிருந்து ரூ. 1000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல குற்றங்களுக்கு அபராதத் தொகையும், சிறை தண்டனைக் காலமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு வாகன ஓட்டிகளிடையே கடுமையான எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ புதிய மோட்டர் வாகனச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்குமே சட்டத்தை அமல்படுத்த சம உரிமையுள்ளது.
எனவே அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம். இப்புதிய சட்டம் கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கம் சாலை விபத்துகளை தவிர்க்கத்தான். அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்ற நோக்கில் அபராதத் தொகையை அதிகரிக்கவில்லை”, எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் ஒன்றுபட்டு சட்டத்திற்குப் பயப்பட வேண்டும் அல்லது உயிர் மீதாவது அக்கறை கொள்ள வேண்டும். ஆனால், இரண்டுமே மக்களிடம் இல்லை. மக்களுக்கு தங்களது உயிரை விட அபராதத் தொகைதான் பெரிதாக தெரிகிறதா?. மக்கள் சட்டத்தை மீறாமல் இருந்தால் அவர்கள் அபராதம் கட்ட தேவையில்லை.
ஊடகங்களுக்கு என்னிடம் பேட்டியெடுத்ததுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதாவது, மக்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை எடுப்பார்கள். சாலை விபத்துகள் குறையும்”, என அவர் தெரிவித்தார்.