சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின கட்கரி சாலை விபத்துகளைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் நேற்று பேசினார். அப்போது பல சம்பவங்களை உதாரணமாகக் கூறிய அவர், தான் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சாலை விபத்தில் சிக்கியதாகக் கூறினார். காவல்துறையினரின் பாதுகாப்பு இருந்தபோதே இவ்விபத்து நேர்ந்ததாகவும் விபத்து நடைபெற்றபோது அவரது கார் ஓட்டுநர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் பணிபுரியும் ஓட்டுநருக்கு இரு கண்களும் தெரியாது என்றும் காது கேட்பதை வைத்தே அவர் காரை ஓட்டுவதாகவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கார் ஓட்டுநர்கள் அரசு மருத்துவமனைகளிலிருந்து போலி உடற்தகுதிச் சான்றிதழ்களைப் பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், கார் ஓட்டுபவர்களுக்குக் கண்களில் குறைபாடு ஏற்பட்டால் மாநில அரசு மாற்று வேலை தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
முறையாக பயிற்சி பெற்ற வாகன ஓட்டிகள் குறைந்து வருவதாக தெரிவித்த அவர், சாலை விபத்துகளால் அப்பாவி மக்கள் இறப்பதைத் தடுக்க முறையான சட்டம் வேண்டும் என்றும் கூறினார்.