2020- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பெரு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள வர்த்தகர்கள், தொழில் துறையினர், சிறு வணிகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கமளித்தும், அவர்களின் சந்தேகங்களையும், பிரச்னைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று சிறு வணிகர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாகவும், அந்நிய முதலீடுகளும், அந்நியச் செலாவணியும் அதிகளவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்கள் கடன் வசதி பெறுவதில் கடும் சவால்களை சந்தித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா, வங்கிகள் காரணமில்லாமல் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க மறுத்தால், வணிகர்கள் அரசிடம் மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்றும் இதற்காக சிறப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை நிதித்துறை சார்பிலும், வங்கிகள் சார்பிலும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு துறைமுகங்களில் வந்திறங்கிய சரக்குகளைப் பெற முடியாமல் சிரமப்படுபவர்கள், அரசை அணுகினால் அதற்குரிய வகையில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
பட்ஜெட்டில் மூலப் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரித்திருப்பதாக வியாபாரி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், தானும், நிதித்துறை மூத்த அலுவலர்களும் வரியை உயர்த்தும் அத்தனை பொருட்களையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ததாகவும், இதில் மூலப்பொருட்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் பதிலளித்தார். அதுமட்டுமின்றி மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் மீதே இறக்குமதி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்யாதீர்கள் என்று கூறவில்லை, ஆனால், உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குங்கள் என்றுதான் கூறுகிறோம் என்றார்.
மேலும், உள்ளூரிலேயே தயார் செய்யப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலேயே இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: சிறு குறு நிறுவனங்களை குறிவைக்கும் ’ஃபெட் எக்ஸ்'