நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங், திகார் சிறையில் 2013 மார்ச் 11ஆம் தேதி சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு குற்றவாளி சிறுவர் என்பதால் மூன்றாண்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் நாளை தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நால்வரும் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு, குறைதீர் மனு ஆகியவற்றை தாக்கல் செய்தனர்.
ஆனால், அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குடியரசுத் தலைவரிடம் அவர்கள் கருணை மனு தாக்கல் செய்தனர். அதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த எந்த மனுவும் நிலுவையில் இல்லாத நிலையில், நாளை அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: பவனின் குறைதீர்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்