2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதில் ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நிர்பயா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது. இதையடுத்து, குற்றவாளிகளின் உறவினர்கள் நேற்று திகார் சிறைக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். இதனிடையே, நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, திகார் சிறை நிர்வாகத்தினர் முன் எழுந்த ஒரே கேள்வி, நிர்பயா வழக்கு குற்றவாளிகளை யார் தூக்கிலிடப்போகிறார்கள் என்பதே அது.
இந்நிலையில், இந்த தண்டனையை நிறைவேற்ற மீரட்டிலிருந்து பவன் ஜலாட் என்ற ஊழியரை உத்தரப் பிரதேச சிறைத்துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து திகார் சிறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கூறுகையில், "இன்று பவன் ஜலாட் திகார் சிறைக்கு மிகவும் பாதுகாப்பான வாகனத்தில் குறைந்தது 15 முதல் 20 ஆயுதம் ஏந்திய காவலர்களுடன்(டெல்லி காவல் துறை மூன்றாம் படை வீரர்கள்) பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்.
ஆனால், பாதுகாப்பு காரணமாக திடீரென வழித்தடம் மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்துள்ளது" என்றார். மேலும் பல பாதுகாப்பு காரணங்கள் கருதி பவன் ஜலாட் குறித்து தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யார் இந்த பவன் ஜலாட்?