உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 18 வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தீ வைத்துக் எரிக்கப்பட்டார். தனது உயிருக்காக இந்த இளம்பெண் போராட, இந்தியாவில் நாளொன்றுக்கு இதுபோல் சுமார் 100 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள், 16ஆம் தேதிதான் தலைநகர் டெல்லியில் நாட்டையே உலுக்கிய கோர சம்பவமான நிர்பயா பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது.
ஏழாண்டுகள் கடந்தும் நாட்டில் இதுபோன்ற கொடுமைகள் தொடரும் நிலையில், நிர்பயாவின் தாயார் நீதிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் மரண தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இதன் தீர்ப்பு வரும் டிசம்பர் 18ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்பயா பாதிக்கப்பட்ட தினமான இன்று, உன்னாவ் வழக்கின் தீர்ப்பும் வெளிவரவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
நேரடி அரசியல் தொடர்புடைய இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் காவல்துறை நடந்துகொண்ட விதமும், பாதிக்கப்பட்ட பெண் விசாரணைக்காக காரில் சென்றபோது விபத்துக்குள்ளானது அவர் மீதான கொலை முயற்சி எனவும் கூறப்படுவதால் இவ்வழக்கின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு சீர்கெட்டுள்ள நிலையையும், அதற்கான பதிலை சமூகமும் அரசும் தர முடியாமல் திணறிவரும் இயலாமையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அண்மையில் தேசிய குற்றவியல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம், கடந்த 2017ஆம் ஆண்டு 33 ஆயிரத்து 885 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒருவர் மைனர் எனவும், நாளொன்றுக்கு சராசரியாக 93 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவம், உன்னாவ் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், பாட்னாவில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் என நீண்ட பட்டியல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தாமதப்படுத்தப்படும் தீர்ப்பு அநீதிக்குச் சமம் என்ற முறையில் ஹைதராபாத் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களை சர்ச்சைக்குரிய வகையில் என்கவுன்டர் செய்து கொன்றனர். இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கும் நிலையில், சட்டரீதியான தீர்வுக்கு பதிலாக இதுபோன்ற குறுக்குவழித் தீர்வு என்ற போக்கு சரியல்ல என்ற கருத்தும் தீவிரமாக ஒலிக்கிறது. விரைவான சட்டத்தீர்வுக்கு வழிவகை செய்வது அவசியம் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில், அமைப்பு ரீதியான சீர்திருத்தத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய சட்ட பின்னடைவுகளை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா இதற்கு தீர்வுகாணாமல் நீண்டகாலம் தாமதிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றும் பெரும் பொறுப்பை பெற்றுள்ளனர். மக்களுக்கு தீர்வுதரும் தேவையான சட்டங்களை இயற்றுவது அவர்களின் பொறுப்பு. அதிகாரத்தில் இன்றளவும் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதே இதற்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க தாமதம் என்ற பேச்சும் நிலவிவருகிறது. கடந்தாண்டு நிகழ்ந்த மீ டூ இயக்கம் இதற்கு நல்ல உதாரணம்.
உன்னாவ் வழக்கில் குல்தீப் செங்கார் என்ற சட்டப்பேரவை உறுப்பினரின் தொடர்பு நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சியை அளிக்கிறது. ஜனநாயகத்தின் பாதுகாவலர்களே பெண்களை சூறையாடும் கொடூரர்களாக மாறும் இத்தகைய மோசமான சூழல் கவலை தருகிறது.
அரசியல் கட்சிகளில் அதிகப்படியாக பாஜக எம்.பி., எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீதும், காங்கிரஸில் 16 பேர் மீதும், ஜெகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் 7 பேர் மீதும் பாலியல் குற்றப்பின்னணி உள்ளது. உன்னாவ் வழக்கில் இன்று வழங்கப்படும் தீர்ப்பு இந்த மோசமான நிலைக்கான தீர்வின் தொடக்கமாக இருக்குமா என்ற கேள்விக்கான விடை நிர்பயா தினமான இன்று தெரியவரும்.
இதையும் படிங்க: தனது ஓய்வைப் பற்றி மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த் - பிரத்தியேக பேட்டி!