கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் ஏற்படுத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் பலருக்கும் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
நிபா வைரஸ் குறித்து எனது பெயரில் உள்ள போலியான சமூக வலைதள கணக்கில் பலர் பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றனர். இது குறித்து சைபர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரப்பப்பட்ட பொய்யான தகவல்களைப் போன்று கேரளாவில் நிபா அதிகளவில் தாக்கவில்லை. எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு மட்டுமே நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புனே வைரஸ் பரிசோதனை நிலையம் அந்த இளைஞருக்கு நிபா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தததையடுத்து அவருக்கு எர்ணாகுளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் அவருடன் இருந்த இரண்டு பேர், அவருக்கு சிகிச்சை அளித்துவரும் இரண்டு செவிலியருக்கும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால் அவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இது தவிர நிபா பாதிப்பு இருப்பதாக அஞ்சப்படும் 85 பேரையும் மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். எனவே மக்கள் போலி செய்திகளை கண்டு அஞ்சாமல் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.
கேரளாவில் தற்போது மீண்டும் நிபா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட நிபா பாதிப்பை மையமாக வைத்து நிபா என்ற பெயரில் அடுத்த மாதம் திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது.