இந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் பதுங்கியிருந்து காஷ்மீர் தம்பதிகளான ஜஹான்ஸைப் சமி வாணி மற்றும் ஹினா பஷீர் பீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதியினர் ஐ.எஸ்.கே.பி (ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு) இணைந்து செயல்பட்டு வந்ததாக அறியமுடிகிறது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள பசவங்குடியைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் மருத்துவர் அப்துல் ரஹ்மான்(28) என்பவரை, விசாரணைக்காக ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. கைது செய்யப்பட்ட ரஹ்மானோடு தேசிய புலனாய்வு முகமையினர் நடத்திய விசாரணையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் பெரும்பலத்தோடு இயங்கிவரும் சிரியாவிற்கு கடந்த 2014ஆம் ஆண்டு அவர் சென்று வந்ததும், அப்போது பாதுகாப்புப் படைகளுடனான மோதல்களில் காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அங்கிருந்த முகாம் ஒன்றில் தங்கியிருந்து மருத்துவ உதவிகளை வழங்கியதும் தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவ ஆண்ட்ராய்டு மருத்துவ மற்றும் ஆயுதம் தொடர்பான இதர செயலிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான் உருவாக்கி வந்த செயலிகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் பற்றி விவாதங்கள் பதிவாகி உள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்துல் ரஹ்மானுடன் இந்த பயங்கரவாத செயல்களில் நெருக்கமாக செயலாற்றிவந்த, அவரது இரு கூட்டாளிகளை புலனாய்வாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 26) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் என்றும்; மற்றொருவர் தொழில் முறை தொழில்நுட்ப பொறியாளர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.