பெங்களூரு: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தம்பதியர் ஜகான்ஷகிப் சமி வானி அவரின் மனைவி ஹினா பகீர் பெய்க் ஆகியோரை டெல்லி ஒக்லா விகார் பகுதியிலுள்ள ஜாமியா நகரில் டெல்லி சிறப்பு பிரிவு காவலர்கள் மார்ச் மாதம் கைதுசெய்தனர்.
அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆசிய பிராந்தியத்தில் தொடர்பிலிருந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து அவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரு பகுதியை சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் அப்துல் ரகுமான் மற்றும் புனே பகுதியைச் சேர்ந்த சதியா அன்வர் ஷேக், நபீர் சித்திக் காத்ரி உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இவர்கள் சிரியா நாட்டுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்துள்ளனர். இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை காவலர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி (திங்கள்கிழமை) பெங்களூருவில் இருந்த அப்துல் ரகுமானை கைது செய்தனர். அவர் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவ கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. மேலும் அவரிடமிருந்து லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய அப்துல்லா பசித் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 20ஆம் நூற்றாண்டின் சிறந்த உளவியலாளர் பி.கே.ஸ்கின்னர் நினைவு தினம் இன்று!