மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் முதுநிலை படிப்பை மேற்கொள்ள இறுதி ஆண்டில் தேசிய அளவிலான பொதுத் தேர்வு (நெக்ஸ்ட்) நடத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி,
”மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் நடத்தப்படும் தேசிய அளவிலான பொதுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான மருத்துவக் கொள்கை உள்ளது. அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கொள்கையும் பின்பற்றப்படுகிறது. இந்த சூழலில் மாணவர்களின் திறனை சோதிக்க நாடு முழுவதிலும் எப்படி ஒரே தேர்வு வைக்க முடியும்.
மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மாநில அரசின் கீழ் உள்ள கல்வியை எடுக்க முயற்சிக்கின்றது. நீட் அறிமுகபடுத்தப்பட்ட பின் தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். எனவே இதுபோன்ற தேர்வுகள் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைப்பதால் இந்த தேர்வை முழுமையாக கைவிட வேண்டும் என்றார்.