கரோனா வைரஸ் நோய் நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாள்களுக்கு நாடு முற்றிலும் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது அவர் கூறுகையில், "கரோனா வைரஸ் நோய்க்கு எதிராக மார்ச் 22ஆம் தேதி நடத்தப்பட்ட ஊரடங்கு மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே ஒரே வழி. மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். அடுத்த 21 நாள்களுக்கு நாடு முடக்கப்படுகிறது. இதனை நாம் கையாளவில்லை என்றால் 21 ஆண்டுகளுக்கு பின்தங்கி போய்விடுவோம்.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்கத்தில் அறிகுறிகள் ஏதும் வெளிப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முன்னெச்சரிக்கையாக வீடுகளில் இருப்பது நன்று. நாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் மூலமே இந்த நோயை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவரும்.
நம்மை நாமே உறுதிப்படுத்தி கொள்ள இதுவே சரியான தருணம். நோய் கண்டறிதல் மையங்களை அமைப்பது, மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தங்களின் உயிர்களை துச்சமென மதித்து தன்னலமற்று பணிபுரிபவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரவு பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர், செவிலியர், நோயியல் நிபுணர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் இந்த 21 நாள்கள் முக்கியமானது. அனைத்து இந்தியர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நோய் குறித்த சரியான தகவல்களை மக்களிடேயே கொண்டு சேர்ப்பதற்காக 24 மணி நேரமும் பத்திரிகையாளர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அவர்களை நினைவில் கொள்ளுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு