பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள வசந்தபுரா அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த தாய்-மகளுக்கு உருமாறிய புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டனிலிருந்து கர்நாடகா திரும்பிய நிலையில், புதிய வகை கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நகர மாநகராட்சியினர் குடியிருப்புக்கு சீல் வைத்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மாநகராட்சி அலுவலர்கள், "குடியிருப்பிலிருந்த சிலர் தங்களுக்கு நெகடிவ் என பரிசோதனை முடிவு வந்ததையடுத்து, தனிமைப்படுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். எனவே, மொத்த குடியிருப்புக்குமே சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு தேவையானப் பொருள்களை பணம் வழங்கி அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்" என்றனர்.
அதேபோல் லண்டனிலிருந்து பெங்களூரு திரும்பிய ஜேபி நகரைச் சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று பேர் அம்மாநிலத்தில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய புதிய கட்டுப்பாடு