பட்டப்படிப்பு படிக்கும்போதே மாணவர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், எம்பில் படிப்பு முறையை நீக்குதல் என புதிய கல்விக்கொள்கையில் பல ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தரும் பல புதிய முயற்சிகள் உள்ளன என்றும், ஆனால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க, சட்டரீதியான உதவி பெறுவதற்கு புதிய கல்விக்கொள்கையில் வழிவகை இல்லை என்றும் ஹைதராபாத்தில் உள்ள நல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பைசன் முஸ்தபா கூறுகிறார்.
முஸ்தபாவுடன் நமது ஈடிவி பாரத்தின் மூத்த செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி நடத்திய பிரத்யேக கலந்துரையாடலின் சிறிய பகுதி...
புதிய கல்விக் கொள்கை-2020 குறித்த உங்களது முதல் கருத்து என்ன?
நான், ஒடிசாவின் சட்டப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்துள்ளேன். அதற்கு முன்பு கிழக்கு இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நிறுவனமான கே.ஐ.ஐ.டி. (KIIT) சட்டப்பள்ளியின் நிறுவன இயக்குநராகவும் இருந்தேன். அறிவியல், கலை, இசையைத் தனித்துவமான நிறுவனங்களாகப் பார்ப்பது காலங்கடந்த யோசனை. இருப்பினும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நான் பணியாற்றிவரும் ஒருங்கிணைந்த கல்விக்கு, இப்போதுகூட நாடு முழுமையாக தயாராகவில்லை.
துறைகளின் குறுக்கீடுகளில் அறிவு இருக்கிறது. ஒருங்கிணைந்த அணுகுமுறை என்ற வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணுகுமுறைக்காகப் பிரதமரை வாழ்த்த விரும்புகிறேன். ஆனால், அது அறிவின் ஒருங்கிணைப்பில் இருந்து இன்னும் ஒருபடி தூரத்தில் உள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் இது மூன்றாவது கல்விக்கொள்கையாகும். இது முந்தைய அரசு கல்வித்துறைக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எது எப்படியோ இந்தக் கொள்கை ஒரு சட்டம் அல்ல. அரசின் நோக்கம் தொடர்பான அறிக்கை மட்டுமே; இது தனது உத்தரவுக்கு அப்பால் தொலைநோக்குப் பார்வையை அமைப்பதற்கான மோடி அரசின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது.
பல்வேறு வகையான பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கும் தற்போதைய நடைமுறையைப் புதிய கொள்கை நீக்கும். இது ஒரு சிறந்த நடவடிக்கையா?
இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் இருப்பதாகக் கருதுகிறேன். மோடி அரசு அமைக்கப்பட்டபோது, நாட்டின் 150 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பதற்கேற்ப செயல்படவில்லை என்று கூறியிருந்தது. எனவே அவர்கள் ஒரு உத்தரவை நிறைவேற்றினர்; அது உச்சநீதிமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது நாட்டின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அனைத்து ஆவணங்களையும் அச்சிடும் பொருட்களையும் மறுபதிப்பு செய்வதற்கே வழிவகுத்தது.
நாட்டில் பல்கலைக்கழகங்களை உருவாக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, மத்திய பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் சட்டம் வாயிலாக உருவாக்குவது. இரண்டாவதாக மாநில பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளின் சட்டத்தாலும் உருவாக்கப்படுகின்றன. இதில், மூன்றாவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரைகளின் பேரில் நிர்வாக உத்தரவின் மூலம் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது.
யுஜிசி சட்டப்பிரிவு 3இன் கீழ் பரிந்துரைகள் அனுப்பப்படுவதால், இவை பிரிவு 3 பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்பட வேண்டும். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், சட்டத்தின் ஆதரவைப் பெறவில்லை. எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அவற்றை பிரிவு 3 பல்கலைக்கழகங்கள் என்று வரையறுக்க சொன்னது.
நம்மிடம் வெவ்வேறு வகையான பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவை அனைத்தையும் ஒரே வகையான பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்துவது பொருத்தமான செயலாக நான் நினைக்கவில்லை.
இந்தக் கொள்கை சில கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் நிறுவனங்களை அனுமதிக்கிறது. இது சரியான நடவடிக்கையா?
அமெரிக்க கல்வி முறையால் இந்தக் கொள்கை மிகவும் தூண்டப்படுவதாக நான் கருதுகிறேன். அங்கு பல கல்லூரிகள் பட்டங்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. சில இங்கிலாந்து கல்லூரிகளும் பட்டங்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. இது ஒரு சாதகமான நடவடிக்கை.
சிக்கல் என்னவென்றால், நமது உயர்கல்வி அதிகளவில் கட்டுப்பாடுகளுடன், குறைந்த நிதியுதவி கொண்டதாக உள்ளது. கொள்கையானது லேசானதாகவும்; ஆனால் கட்டுப்பாடுகள் இறுக்கமாவும் உள்ளது. அதில், ஏதேனும் இறுக்கம் இருப்பின் அது லேசானதாக இருக்காது.
அதிக கட்டுப்பாடுகளால் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சுயாட்சி இருக்காது. நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி சுயாட்சியை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இங்கு உண்மையான சுயாட்சி இல்லை. நாம் அமெரிக்க முறையைப் பின்பற்றுகிறோம் என்றால், அவர்களை போலவே சுயாட்சியையும் நாம் வழங்க வேண்டும்.
இடையில் படிப்பைக் கைவிடும் மாணவர்களுக்கான பல வெளியேறும் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்பவர்களுக்கு டிப்ளோமா வழங்கவும், மூன்று ஆண்டுகள் நிறைவு செய்பவர்களுக்கு பட்டம் வழங்கவும், நான்காம் ஆண்டு மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதும் நல்லது. எனினும், கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், மாநிலங்கள் அதை வெவ்வேறு முறையில் செயல்படுத்தும்.
இன்று, பல்கலைக்கழங்கள் தாங்கள் அளிக்கும் பட்டங்களுக்கு தங்களது பெயரைப் பயன்படுத்த அனுமதிக்காத அளவிற்கு, யு.ஜி.சி. நம்மைக் கட்டுப்படுத்துகிறது.
இது ஒரு கொள்கையே தவிர சட்டம் அல்ல எனில், மாநிலங்கள் தங்களது சொந்த கொள்கைகளையும் சட்டங்களையும் வடிவமைப்பதற்கு சுதந்திரம் இருக்குமா?
அரசியலமைப்பின் கீழ் கல்வித்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது; அதேநேரம் மத்திய கல்வி கொள்கைக்கும், ஒரு மாநிலத்தின் சட்டத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டால், மாநிலத்தின் சட்டமே மேலானது. இருப்பினும், அதுவே மத்திய சட்டமாக இருந்தால், அது மாநிலத்தின் சட்டத்தை விட மேலோங்கியதாகும்.
ஐ.மு.கூ. அரசை பொறுத்தவரை, ஒவ்வொரு உரிமையும் உதாரணத்திற்கு உணவு உரிமை, தகவல் அறியும் உரிமை என சட்டத்தால் ஆதரிக்கப்படுவதைக் கண்டோம். எனவே, இந்தக் கொள்கை சட்டத்தால் ஆதரிக்கப்படாததால், அதில் இடைவெளி உள்ளதா?
இது ஒரு கொள்கைதான், சட்டம் அல்ல. ஆனால் அரசு ஒரு திசையைக் காட்டியுள்ளது; கொள்கையின் அடிப்படையில் சட்டங்கள் வடிவமைக்கப்படும். ஆனால், பல விஷயங்கள் காலப்போக்கில் மாறுகின்றன; எதிர்க்கட்சியாக இருந்தபோது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு நுழைவதை தே.ஜ. கூட்டணி எதிர்த்தது. இன்று அரசு பொறுப்பில் இருக்கும்போது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தைக் கொண்டு வருவது பற்றி அது பேசுகிறது. இது முரண்பாடாக உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல உரிமைகளுக்கான சட்ட கட்டமைப்பை தந்தது என்று சொல்வது சரியானது; ஆனால் அதில் குறைபாடுகளும் இருந்தன. உதாரணத்துக்கு கல்வி உரிமைச் சட்டம், 15 வயதுள்ள மாணவர்களை மட்டுமே உள்ளடக்கியது மற்றும் பாலர் பள்ளிகள் அதில் சேர்க்கப்படவில்லை. தற்போது இதில் பாலர் பள்ளியினர் தொடங்கி 18 வயதினர் வரை என்று விரிவுபடுத்தியதற்காக பிரதமரை வாழ்த்த விரும்புகிறேன்.
புதிய கல்விக்கொள்கை எம்பில் படிப்பு கைவிடப்படுகிறது. இது நல்ல விஷயமா?
இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று நினைக்கிறேன், பிஹெச்டி செய்வதற்கு முன் எம்பில் முடிக்க வேண்டிய அவசியமில்லை. வெறுமனே, பிஏ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் பிடெக் முடித்து, நேரடியாக அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படிப்பில் சேர்ந்து, தாமாகவே எம்எஸ் பட்டம் பெறுவார்கள். நல்சார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு நேரடியாக பிஹெச்டி படிப்பை அனுமதித்துள்ளோம். அமெரிக்காவின் மாதிரியில் இருந்து நாங்கள் பல விஷயங்களை ஏற்றுக்கொண்டோம், ஆனால் அமெரிக்காவில் யுஜிசி போன்ற கட்டுப்படுத்தும் அமைப்பு இல்லை.
உங்களைப் பொறுத்தவரை, புதிய கல்விக் கொள்கையில் எது இல்லை?
புதிய கல்விக்கொள்கையில் உள்ளடக்கம், பன்மைமுகத்தன்மை போன்ற பல அம்சங்களை நாங்கள் விவாதித்தோம்; ஆனால் இடஒதுக்கீட்டில் என்ன நடக்கும் என்பது குறித்து இது மவுனமாக உள்ளது. நமது பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களைப் பொறுத்தவரையில் நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் ஒருசில தலித் பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் மட்டுமே காண்பீர்கள். துறை வாரியாக இடஒதுக்கீடு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன, இருப்பினும், பல்கலைக்கழக வாரியாக இடஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் உறுதியான நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க: 'ராமராஜ்ஜியம், தர்மத்தை உலகளாவிய செய்தியாக பரப்ப வேண்டும்' - வெங்கையா நாயுடு!