உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அப்பெண்ணை சிலர் மீட்டனர்.
பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் செப். 29ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் கூட ஒப்படைக்காமல் செப். 29ஆம் தேதி நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களை வெடிக்கச் செய்தது.
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. தற்போது கையாண்டுவருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் தொடர்பாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, நடிகை ஸ்வாரா பாஸ்கர் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் பதிவிட்டிருந்தனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் விவரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், ஹத்ராஸில் உயிரிழந்த இளம்பெண்ணின் தகவலை வெளிப்படுத்திய பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, நடிகை ஸ்வாரா பாஸ்கர் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஐய் சிங் ஆகியோருக்கு தேசிய மகளிர் ஆணையம் நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அத்துடன், ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண் தொடர்பாக அவதூறான பொய் செய்திகளை பரப்பிவரும் பாஜகவினருக்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.