சிவசேனா கட்சியின் சார்பில் தசராவை முன்னிட்டு நேற்று முன்தினம் (அக்டோபர் 25) தாதர் சிவாஜி பூங்கா எதிரில் உள்ள சுவந்திரியவீர் வீர்சாவக்கர் மண்டபத்தில் பிரமாண்ட விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய உத்தவ் தாக்கரே, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அத்துடன், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என்று பாஜகவுக்கு பகிரங்க சவால் விடுத்தார்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் தசரா விழா உரையை தேசியவாத காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய மகாராஷ்டிரா சிறுபான்மை விவகார அமைச்சரும், என்சிபியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக், "சிவசேனா கட்சியின் சார்பில் நடைபெற்ற தசரா பேரணியின் போது பாஜகவை கேள்விகளால் துளைத்தெடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் உரையை 100 விழுக்காடு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.
அவர் தனது உரையின் மூலம் என்.டி.ஏ கூட்டணிக்கு யதார்த்தத்தை பிரதிபலித்தார். மத அடிப்படையிலான வகுப்புவாத வெறுப்பு அரசியலை கைக்கொண்டுள்ள பாஜக மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி வகுத்த பொதுவான குறைந்தபட்ச ஒன்றிணைவு திட்டத்தின் படி செயல்பட்டு வருகிறது.
மூன்று எம்.வி.ஏ பங்காளி கட்சிகளும் கூட்டணி அரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும், அவரவர் சித்தாந்தங்களை விட்டுவிடவில்லை. பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரோ அல்லது அவர்களின் தலைவர்களோ மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறார்கள் என்பது குறித்து அவர் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்" என கூறினார்.