மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனாவால தபால் நிலையத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கனடாவிலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அதை அலுவலர்கள் சோதனை செய்தபோது அதில் 1.03 கிலோ போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மும்பையில் உள்ள நேரு கட்டடத்திலிருந்து மேலும் 74 கிராம் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 50 முதல் 55 லட்சமாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த போதைப்பொருளை மும்பை மற்றும் அகமதாபாத்தில் விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டதாகவும் அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகத் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமே பரேஷ் ஷா(26), மற்றும் ஓம்கார் ஜெய்பிரகாஷ் துபே(28) ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது, இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளைக் கும்பல்; எதிர்த்துப் போராடும் நபர் - வைரலாகும் காட்சி!