ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது பிஜு ஜனதா தளம் கட்சி. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இன்று முதலமைச்சராக பதவி ஏற்கிறார். கடந்த ஞாயிறன்று ஒடிசா ஆளுநர் கணேஷி லால் அவரை முதலமைச்சர் பதவி ஏற்க அழைப்பு விடுத்திருந்தார்.
நவீன் பட்நாயக் உடன் 20 அமைச்சர்கள் இன்று பதவியேற்க இருக்கின்றனர். பட்நாயக்கின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இன்று 20 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார்.
நடந்து முடிந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் அரசு அமைக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகின்றது.
இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சர் பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.