இந்தியாவில் பாஜக காலுன்றவே முடியாத மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. தமிழ்நாடு, கேரளா போல பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு எப்போதும் 'நோ-என்ட்ரி' கொடுத்து வருகிறது. இதற்கு மாநில கட்சியான பிஜு ஜனதா தளமும், அதன் தலைவரான நவீன் பட்நாயக் மட்டுமே காரணம். மக்கள் எளிதில் அணுகும் எளிமையும், மாநிலத்தின் சுயாட்சியை விட்டுக் கொடுக்காமல் தன்னுள் வைத்திருப்பதே முக்கிய காரணங்கள்.
ஆண்டு தோறும் இயற்கை பேரிடரில் ஒடிசா சிக்கினாலும், நவீன் பட்நாயக்கின் தேர்ந்த ஆட்சியால் மீண்டும் மீண்டும் வீரியமுடன் எழுந்து நிற்கிறது ஒடிசா. இதற்கு சமீபத்தில் தாக்கிய பாணி புயல் தாக்கியபோதும், மக்கள் கலங்காதிருக்க காரணம் நவீன் பட்நாயக். அதனால்தான் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முதல் தொடர்ந்து 4 முறை தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அங்கு காங்கிரஸ், பா.ஜ.க, பிஜு ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தன. இந்த முறை நவீன் பட்நாயக்கிற்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னவர்களுக்கு, தன்னுடைய அரசியல் வெற்றியால் பதில் அளித்திருக்கிறார் நவீன் பட்நாயக்.
மதியம் 2 மணி தேர்தல் முடிவின்படி பிஜூ தனதா தளம் 104 இடத்திலும், பாஜக 26 இடத்திலும், காங்கிரஸ் 14 இடத்திலும், மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மாநில கட்சி, இதுபோன்று தனிப்பெரும்பான்மை இடங்களை பிடிக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருப்பதால், தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் மீண்டும் ஒடிசா முதல்வராக அரியணை ஏறவுள்ளார். மக்களின் தேவையை புரிந்து, மாநிலத்தின் வளர்ச்சியை அறிந்து, நல்லாட்சி கொடுக்கும் நவீன் பட்நாயக்கை அம்மாநில மக்கள் மீண்டும் மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்கின்றனர்.