டெல்லியின் முக்கியப் பகுதிகளாக சொல்லப்படும் ராஜீவ் சவுக், ராஜ்பாத், ஜந்தர்மந்தர், ஜன்பத் ரோடு உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் முக்கிய போக்குவரத்து சேவைகளான மெட்ரோ, பேருந்து உள்ளிட்டவைகளும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்தனர்.
ஆங்காங்கே டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் ராஜீவ் சவுக், கன்னாட் பிளேஸ், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளும் பொதுமக்கள் யாருமின்றி வெறுமனே காட்சியளித்தன.
வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை கடந்த சில நாட்களாகவே டெல்லி அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு, சனிக்கிழமைகளில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் கடைகளில் டெல்லி மக்கள் குவிந்ததனர்.
மக்கள் ஊரடங்கு உத்தரவால் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து டெல்லியில் வந்து குடியிருக்கும் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் அவதியுற்றனர். டெல்லியில் இயங்கிவரும் இரவு நேர தங்கும் இல்லங்களில், இலவச உணவு வழங்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மார்ச் 31 வரை ரயில்கள் ரத்து!