நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பல்வேறு தொழில்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை குறைத்துவிட்டன. குறிப்பாக வாகனத் துறையில் உற்பத்தி குறைப்பு, கட்டாய விடுப்பு, கட்டாய ஓய்வு போன்ற அவலங்களும் அரங்கேறி வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்பின்மையால் படித்த பட்டதாரி இளைஞர்களும் பரிதவித்துவருகின்றனர். மேலும் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக படித்த படிப்பிற்கு பதிலாக சம்பந்தமில்லாத வேறு வேலைகளுக்கு செல்லும் சூழலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள பேருந்து நிலையம் அருகே தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வேலை வாய்ப்பின்மையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷூக்களுக்கு பாலிஷ் போடுவது, பழங்களை விற்பனை செய்வது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆண்டுதோறும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு, அதேபோன்று அதிலிருந்து பட்டதாரிகளாக வெளியே வரும் மாணவர்களின் நிலை குறித்து கவனத்தில் கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருந்தால், மாணவர்கள் இதுபோன்று நடுரோட்டில் அமர்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் போடும் நிலை ஏற்பட்டிருக்காது. இனியும் இதுபோன்ற போராட்டங்களை தடுப்பது அரசின் கையிலேயே உள்ளது என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.