புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மதகடிபட்டில் உள்ள வாரச்சந்தை இருக்கும் இடத்தில் 20 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் குடிசை வீடுகளைக் கட்டி வாழ்ந்துவந்தனர். இந்த குடிசைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
இதனால் பாதிப்புக்குள்ளான நரிக்குறவர்கள் தங்களுக்கு மாற்றுஇடம் வழங்கக்கோரியும், தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இன்று புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர்.
தங்களுக்கு மாற்றுவீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி பழங்குடியினர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துவந்தனர். அதனையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டிலிருந்து வெளிவந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தற்காலிக சுமுகத்தீர்வு ஏற்பட்டதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: 'அடிப்படை வசதிதானே கேக்குறோம்' - நியாயம் கேட்ட வன கிராம மக்கள் மீது வழக்கு!